இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி || Tamil News Vaccination of 12-17 years age group will start from next month

Byநாடு முழுவதும் 20 முதல் 30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் தற்போது 75 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதற்கு கீழ் வயதுடைய குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை. உலகில் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்கி இருக்கின்றன.

இப்போது இந்தியாவிலும் 12 வயதில் இருந்து 17 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்துகள் குழந்தைகளுக்கு போடுவதற்கு ஏற்றதாக தயாரிக்கப்படவில்லை.

எனவே அவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை உருவாக்கி உள்ளது.

இதை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்தின் சோதனை வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் மத்திய அரசுக்கு அது சப்ளை செய்யப்படும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

முதலாவதாக இணை நோய் உள்ள குழந்தைகளுக்கே முதலில் ஊசி போடப்பட இருக்கிறது. அதாவது இதய நோய், உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய் உள்ள குழந்தைகளுக்கு முதலில் ஊசி போடப்படும்.

அந்த வகையில் நாடு முழுவதும் 20 முதல் 30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதத்தில் ஊசி போட்டு முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர்.

உற்பத்தி செய்யப்படும் மருந்து கிடைப்பதன் அடிப்படையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அதிகாரிகள் கூறினார்கள்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment