கர்நாடக சட்டசபை கூட்டத்துக்கு மாட்டு வண்டிகளில் வந்த காங்கிரஸ் தலைவர்கள் || Tamil News Congress leaders arrive for Karnataka assembly session in Bullock cart

Byவிலைவாசி உயர்வைக் கண்டித்து சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. விலைவாசி உயர்வை கண்டிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாட்டு வண்டிகளில் சட்டசபை கூட்டத்திற்கு வந்தனர். அதாவது டி.கே.சிவக்குமார் சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தும், சித்தராமையா குமாரபார்க் பகுதியில் உள்ள வீட்டில் இருந்தும் மாட்டு வண்டிகளில் விதான சவுதாவுக்கு வந்தனர்.

இரு தலைவர்கள் வந்த மாட்டு வண்டிகள் விதான சவுதா அருகே ஒன்று சேர்ந்தன. பின்னர் அங்கு சித்தராமையாவின் மாட்டு வண்டியில் டி.கே.சிவக்குமார் ஏறினார். அந்த மாட்டு வண்டி விதான சவுதாவுக்கு வந்தது. அவர்களை பின்தொடர்ந்து மற்ற தலைவர்களும் மாட்டு வண்டிகளில் வந்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். விதான சவுதா வளாகத்திற்குள் மாட்டு வண்டி நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாட்டு வண்டியை விதான சவுதா கட்டிடம் அருகில் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை விதான சவுதாவுக்குள் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

மாட்டு வண்டிகளில் விதான சவுதாவுக்கு வந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசு, பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், இங்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். இதன் மூலம் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.

மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் ரூ.24 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு, முந்தைய அரசு வைத்துவிட்டு சென்ற கடன் சுமையால் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக சொல்கிறது.

இது முழு பொய். முந்தைய அரசு ரூ.1.30 லட்சம் கோடி கடன் வைத்தது. விலைவாசி உயர்வை கண்டித்து சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment