பெண்கள் பாதுகாப்பு குறித்து உள்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் உத்தவ் தாக்கரே தீவிர ஆலோசனை || uddhav Thackerayconsultation Police officials on women’s safety

Byசாக்கிநாக்காவில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பெண்கள் பாதுகாப்பு குறித்து உள்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

மும்பை :

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் நடைபாதையில் வசித்து வந்த 34 வயது பெண் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டெம்போவில் காமுகனால் கற்பழிக்கப்பட்டார்.

மேலும் கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். காவலாளி ஒருவர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இதில் உடல் முழுவதும் காயம் அடைந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 36 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் போலீசார் மோகன் சவுகான்(வயது45) என்ற டிரைவரை கைது செய்தனர். இவரும் நடைபாதையில் வசித்து வந்தவர் ஆவார்.

டெல்லி நிர்பயா சம்பவம் போல நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று கற்பழிப்பு, கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணும், மோகன் சவுகானும் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்றும், பணப்பிரச்சினையில் இந்த பயங்கர சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறினார்.

இதேபோல குற்றவாளி, பெண்ணை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிக்கு அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தில் குற்றவழக்குகள் எதிலும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல உல்லாஸ்நகரில் 15 வயது சிறுமி சுத்தியால் தாக்கி வாலிபரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறி இருந்தது. இதேபோல புனே, நாசிக், வசாய், அமராவதி, அமகதுநகர், பால்கர் ஆகிய பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று உள்துறை மூத்த அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் உயர் மட்ட கூட்டத்தை கூட்டினார். மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்த இந்த அவசர கூட்டத்தில் மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல், தலைமை செயலாளர் சீத்தாரம் குந்தே, கூடுதல் தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவட்சா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், ரெயில்வே போலீஸ் கமிஷனர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது உத்தவ் தாக்கரே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் சாக்கிநாக்கா கற்பழிப்பு, கொலை வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதேபோல இனிமேல் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரே போலீசார், அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும் சாக்கிநாக்கா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதேபோல பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்து உள்ளது. எனவே உத்தவ் தாக்கரே தேசிய தாழ்த்தப்பட்ட சமூக ஆணைய துணை சேர்மன் அருண் ஹால்தரை அழைத்தும் சாக்கிநாக்கா வழக்குப்பற்றியும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்கும் எனவும் உத்தவ் தாக்கரே அவரிடம் உறுதி அளித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment