ரூ.2 கோடி மதிப்பில் சித்தி விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர் || Tamil News Christian retired businessman Gabriel built a Siddhivinayak temple in Udupi

Byதனது தந்தை, தாயின் நினைவாக ஒரு விநாயகர் கோவிலை கட்டித் தந்த கிறிஸ்தவ தொழிலதிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

உடுப்பி:

உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:

உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (77). இவர் தொழிலதிபர் ஆவார்.

கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன் கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.

அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்தக் கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.

இந்தக் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேபிரியல் கூறுகையில், நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்குச் சென்றேன். மும்பையில் உள்ள பிரபாதேவி கோவிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு செய்து, தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment