இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பே இல்லை; டி20யில் வீழ்த்துவோம்: பாகிஸ்தான் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பேட்டி

By


இந்திய அணியுடன் இப்போதுள்ள சூழலில் இரு நாட்டு கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஒருமனதாக முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாரியத்தின் தலைவராக அதிகாரபூர்வமாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட ரமீஸ் ராஜா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி மிகவும் கடினமானது, சவாலானது. இதை உணர்ந்துதான் பிரதமர் இம்ரான்கான் என்னிடம் பொறுப்பை வழங்கியுள்ளார். அதை நான் மனநிறைவுடன் செய்வேன் என நம்புகிறேன்.

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே இப்போதைக்கு கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை. அரசியல் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட்டை வீணாக்கிவிட்டது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. நிதானமாகத்தான் செயல்பட வேண்டும். முதலில் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை வலுப்படுத்தவே அதிகமாக கவனம் செலுத்துவேன்.

பாகிஸ்தான், நியூஸிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு டிஆர்எஸ் முறை இல்லை என்பது உறுதியானதுதான். அதனால் பல குழப்பங்கள் வருகின்றன. இந்த விவகாரம் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டமைப்புக்குத் தேவையான வசதிகளை அதிகப்படுத்திவிட்டுதான் பயிற்சியை மேம்படுத்த முடியும். முதலில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

அக்டோபர் 24-ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் அணி வீரர்களைச் சந்தித்தேன். இந்த முறை நிச்சயம் இந்திய அணியை வீழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாக அமையும். இந்த முறை பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என அணி வீரர்களிடம் நானும் தெரிவித்துள்ளேன். 100 சதவீத உழைப்பை அணி வீரர்கள் அளிக்க வேண்டும், சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.

பிரச்சினைகளைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும், போட்டிகளை இழந்தாலும் அடுத்தடுத்து நகர வேண்டும். அணியில் உள்ள வீரர்கள் தங்களின் இடத்தைத் தக்கவைப்பது குறித்துக் கவலைப்படாதீர்கள், பயமின்றி விளையாடுங்கள் எனத் தெரிவித்துள்ளேன். இந்தப் பாதையில் செல்லும்போது வெற்றிகளைவிட அதிகமான தோல்விகளைச் சந்திப்போம் எனத் தெரிவித்தேன். ஆதலால் வீரர்கள் மனநிலையில் மாற்றம் தேவை. அச்சமில்லாமல் விளையாடுங்கள் எனக் கூறினேன்”.

இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

Source link

Leave a Comment