ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணி: ஹீரோ சாஹர், புவனேஷ்வர்: 9 ஆண்டுகளாக தோல்வியைச் சந்திக்கவில்லை

By


தீபக் சஹரின் ஆல்ரவுண்ட் பேட்டிங், புவனேஷ்வர் குமாரி்ன் பொறுமையான ஆட்டம் ஆகியவற்றால் கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் இலங்கை மண்ணில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததில்லை எனும் வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது.

இலங்கை மண்ணில் நடந்த பகலிரவு ஒருநாள் போட்டியில் சேஸிங் செய்யப்பட்ட 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 9-வது முறையாக ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக 93 ஒருநாள் போட்டிகளில் வென்று ஓர் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணி என்ற வரலாற்றையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9-வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர்குமாரும்தான்.

இரு பந்துவீச்சாளர்களும் ஆடி அணியை வெற்றி பெறச் செய்ததைப் பார்த்தபோது, கடந்த 1997ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டைட்டன் கோப்பைதான் நினைவுக்கு வந்தது. பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் ஜவஹல் ஸ்ரீநாத்தும், அனில் கும்ப்ளேயும் சேர்ந்து கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து இந்திய அணியை வெல்ல வைத்தனர். அதேபோன்று தீபக் சஹரும், புவனேஷ்வர் குமாரின் ஆட்டமும் அமைந்தது.

இதில் தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். அவருக்குத் துணையாக ஆடிய புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உலகக் கோப்பையில் ரவிந்திர ஜடேஜா 77 ரன்கள் சேர்த்ததே இந்திய அணியில் 8-வது வீரராக களமிறங்கி ஒரு வீரர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, அதற்கு அடுத்தார்போல் சஹர் 69 ரன்கள் சேர்த்துள்ளார்

புவனேஷ், சஹர் இருவரும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களும், அதன்பின் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது, ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது. ஆனால், தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து அணியை கட்டிஇழுத்து வெற்றியின் பக்கம் கொண்டு வந்தனர்.

இந்தப் போட்டிக்குமுன் தீபக் சஹரின் அதிகபட்ச ஸ்கோர் என்பது 12 ரன்கள்தான். ஆனால், அணியின் சூழல், வெற்றி தேவை என்ற நெருக்கடி ஆகியவற்றால் தீபக் சஹர் பேட்டிங்கில் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி முதலாவது அரைசதத்தையும் பதிவு செய்துள்ளார். இதற்குமுன் முதல்தரப் போட்டிகளில் தீபக் சஹர் அரைசதங்கள் அடித்திருந்தாலும், சர்வதேச அளவில் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

தீபர் சஹரின் பொறுமையான ஆட்டம், ஷாட்கள், ஸ்லோ பந்துகளை சமாளித்தது என இலங்கை வீரர்களின் பந்துவீச்சை லாவகமாகச் சமாளித்து ஆடியது பாராட்டுக்குரியது. புவனேஷ்வர் குமாரின் அனுபவம், பொறுமை, சஹருக்கு ஒத்துழைத்து ஆடியது வெற்றிக்கு துணையாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் ஹசரங்காவுக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஆட்டம் போலவே இருந்தது. மிகக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஹசரங்கா இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினார். பிரித்வி ஷா, தவண், குர்னல் பாண்டியா ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி நெருக்கடி கொடுத்த ஹசரங்காவின் பந்துவீச்சையும் சஹரும், புவனேஷ்வர் குமாரும் சமாளித்து ஆடியது பாராட்டுக்குரியது.

276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பிரித்வி ஷா அதிரடியாக 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் வெளியேறினார். இஷான் கிஷன் வந்தவேகத்தில் ஒரு ரன்னில் ரஜிதா பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.

மணிஷ் பாண்டே, தவண் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு ஓரளவு தாக்குப்பிடித்தனர். தவண் 29 ரன்னில் ஹசரங்கா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், பாண்டே இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பாண்டே 37ரன்னில் ரன்அவுட் ஆகி, மீண்டும் ஏமாற்றம் அளித்தார். மிகவும் மெதுவாக ரன்களை சேர்த்த பாண்டேயின் ஆட்டம் மனநிறைவைத் தரவி்ல்லை. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா டக்அவுட்டில் சனகா பந்துவீச்சில் வெளிேயறி ஏமாற்றம் அளித்தார். 6-வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினர். யாதவ் 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். சூர்யகுமார் 53 ரன்கள் சேர்த்த நிலையில் சண்டகன் பந்தவீச்சில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார். குர்னல் பாண்டியா 35 ரன்னில் ஹசரங்கா பந்துவீச்சில் போல்டாகினார்.

193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை லாவகமாகச் சமாளித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். சஹர் 69 ரன்னிலும், புவனேஷ்வர் 19 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 49.1 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.முதலாவது ஒருநாள் ஆட்டத்தைவிட இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்களின் பேட்டிங் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது.

பனுகா, பெர்னான்டோ நல்ல தொடக்கம் அளித்தனர். பனுகா 36ரன்னில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ராஜபக்ச டக்அவுட்டில் சஹல் பந்தவீச்சில் வெளியேறினார். டி சில்வா 32 ரன்னிலும், அசலங்கா 65 ரன்களும சேர்த்தனர்.

கருணா ரத்னே 44 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி.

இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார், சஹல் தலா 3 விக்கெட்டுகளையும், சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Source link

Leave a Comment