ஒலிம்பிக் நினைவலைகள் 3: சிக்கன ஒலிம்பிக் தெரியுமா?

By


இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற 1940, 1944 ஆகிய காலங்களில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. போரின் காரணமாக இந்த இரு முறையும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்தான் நடைபெற்றது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது. 1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு ஜெர்மனியும் ஜப்பானும் அழைக்கப்படவே இல்லை. ஆனால், சோவியத் யூனியனுக்கு ஒலிம்பிக்கில் விளையாட அழைப்பு அனுப்பப்பட்டபோதும், அந்த நாடு ஒலிம்பிக்கைப் புறக்கணித்தது.

அப்போது லண்டன் உள்பட ஐரோப்பிய நகரங்கள் பலவும் போரால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்தன. ஆனால், பொருளாதார ரீதியாகத் தள்ளாடிக்கொண்டிருந்தன. எனவே, 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்பாடுகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. குறிப்பாக, ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்படவில்லை. வீரர், வீராங்கனைகள் தங்கும் வசதிகளையோ, ஒலிம்பிக்குக்கென பிரத்யேகமாகப் போட்டி நடைபெறும் இடங்களையோ உருவாக்கவில்லை.

பிரதிநிதித்துவப் படம்

ஏற்கெனவே இருந்த தங்கும் விடுதிகளில்தான் வீரர்கள் தங்க வைக்கப்பட்டனர். வீராங்கனைகள் லண்டன் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டனர். உணவுகள், எரிபொருள்கள் ஆகியவை எல்லாம் ரேஷன் பாணியில்தான் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டன. அதனால்தான் ஒலிம்பிக் வரலாற்றில் ‘சிக்கன ஒலிம்பிக்’ என்று 1948 லண்டன் ஒலிம்பிக் அழைக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளின் மையமாக எம்பரர் ஸ்டேடியமே (வெம்ப்லி ஸ்டேடியம்) இருந்தது. இந்த மைதானத்துக்குச் சுரங்கப்பாதையில் செல்வதற்காக வழி ஒன்று லண்டனில் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சுரங்கப் பாதையை, இரண்டாம் உலகப் போரில் போர்க் கைதிகளாகப் பிடிபட்ட ஜெர்மானியினரைக் கொண்டு அமைக்கப்பட்டதாக புகாரும் எழுந்தது.

Source link

Leave a Comment