டி20 உலகக்கோப்பை: பாக் அணிக்கு ஆஸி. தெ. ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்கள்

By


அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளர்களாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலான்டர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமைப் பயிற்சியாளர்களாக மிஸ்பாவும், வக்கார் யூனுஸும் நியமிக்கப்பட்டனர். இருவரின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில் கடந்த 6-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தனர்.

இருவரும் ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

மேத்யூ ஹேடன், பிலான்டர்

அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை போட்டி தொடங்க இருக்கும் நிலையில், மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனுஸ் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா இன்று பதவி ஏற்ற நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு மட்டும் பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளர்களாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலான்டர் இருவரையும் நியமித்து உத்தரவிட்டார்.

புதிய பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து ரமீஸ் ராஜா கூறுகையில், “பாகிஸ்தான் அணிக்குப் புதிய பாதை, திசை தேவை என நினைக்கிறேன். ஆதலால் மேத்யூ ஹேடன், பிலான்டர் இருவரையும் டி20 உலகக் கோப்பைக்குப் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளேன்.

முன்னோக்கி நகர்ந்து செல்ல, நாம், தீவிரமான பயிற்சிகளைச் செய்வது அவசியம். அதற்குச் சரியான நிலையில் இருப்பவர்களை மாதிரியாகக் கொள்ள வேண்டும். நம்முடைய நோக்கம் அணி சிறந்த முன்னேற்றத்தைப் பெறுவதற்கு தேவையான வாய்ப்புகளை வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு மட்டும் பாகிஸ்தான் அணிக்கு அப்துல் ரசாக், சக்லைன் முஷ்டாக் இருவரும் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பாகிஸ்தான் வெளிநாடுகளைச் சேர்ந்த ரிச்சார்ட் பைபஸ், பாப் உல்மர், ஜெப் லாஸன், டேவ் வாட்மோர், மிக்கி ஆர்தர் ஆகியோரைப் பயிற்சியாளர்களாக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment