டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய ‘ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ

By


ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17-ம் தேதி கோலாகலமாகத் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் புதிய வடிவ பில்லியன் சீரிஸ் ஜெர்ஸியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிமுகம் செய்தது.

அடர்நீல நிறத்தில், பல டிசைகளுடன் இருக்கும் இந்தப் புதிய ஆடைக்கு “பில்லியன் சீரிஸ் ஜெர்ஸி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அணிந்த ஜெர்ஸியைப் போல் கருநீலத்தில் பச்சை, சிவப்பு, நீலம், வெள்ளை கோடுகளைக் கொண்ட ஜெர்ஸி வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரிலிருந்து அந்த ஜெர்ஸியைத்தான் இந்திய வீரர்கள் அணிந்து வருகிறார்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்காக புதிய வடிவ ஜெர்ஸியை பிசிசிஐ அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இந்திய அணியின் கிட்ஸ் ஸ்பான்ஸர் நிறுவனமான எம்பிஎல் நிறுவனம் இந்த ஆடைகளைத் தயாரித்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்ட புதிய ஜெர்ஸி

பிசிசிஐ அமைப்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் ஆதரவை, ஈர்ப்பைப் பெற்ற ஜெர்ஸி. இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் புதிய ஜெர்ஸியை அணிந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.

கடந்த மாதம் டி20 உலகக் கோப்பைக்காக பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி அமைத்த பாடலை ஐசிசி வெளியிட்டது. உலகெங்கும் இருக்கும் இளம் கிரிக்கெட் ரசிகர்களை மையப்படுத்தி பாடல் அமைக்கப்பட்டது. இந்திய கேப்டன் கோலி, மே.இ.தீவுகள் கேப்டன் பொலார்ட், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் உள்ளிட்டபல வீரர்களை அனிமேஷன் மூலம் வடிவமைத்து இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது ஐசிசி என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment