தோனி தேவை; 2013-ம் ஆண்டிலிருந்து ஐசிசி கோப்பை ஏதும் இந்தியா வெல்லவில்லையே?- பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

By


2013-ம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஐசிசி சார்பில் நடத்தப்படும் எந்தவிதமான போட்டியிலும் கோப்பையை வெல்லவில்லையே. அதனால்தான் தோனி டி20 உலகக் கோப்பைக்கு ஆலோசகராக, வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனியை பிசிசிஐ நிர்வாகம் நியமித்துள்ளது. பிசிசிஐயின் நடவடிக்கை குறித்து சில கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் மிகச்சிறந்த முடிவு எனப் பாராட்டுகின்றனர், ஆனால், மற்ற சிலர் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து ‘தி டெலிகிராப்’ நாளேட்டுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

”அணியின் சூழல், நிலையை ஆய்வு செய்த பின்புதான் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தோனியை ஆலோசகராக, வழிகாட்டியாக நியமிக்க முடிவு செய்தோம். 2013-ம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஐசிசி சார்பில் நடத்தப்படும் எந்தப் போட்டியிலும் கோப்பையை வெல்லவில்லை என்பதை உணர்கிறார்களா? டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியை மட்டுமல்ல, இந்திய டி20 அணியை வழிநடத்திய காலத்திலும் தோனிக்கு நல்ல டிராக் ரெக்கார்டு இருக்கிறது. அதனால்தான் தோனி வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனியை நியமிக்கும் முன் ஏராளமான ஆழ்ந்த ஆலோசனைகள் நடத்திதான் முடிவு எடுத்தோம். 2013-ம் ஆண்டிலிருந்து ஐசிசி கோப்பையை வெல்லவில்லைதானே.

ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை வெல்வதற்கு அந்நாட்டின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஸ்டீவ் வாஹ் ஆலோசகராக, வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். வெற்றிகரமான மனிதர்கள் நிச்சயம் அணிக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். கடந்த ஆஷஸ் சீசனில் ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி சென்று இங்கிலாந்தில் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஆதலால் தோனி போன்ற பெரிய மனிதர்கள், வெற்றி கேப்டன் நியமனம் இந்திய அணிக்கு உதவும்”.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

Source link

Leave a Comment