வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவதுதான் முக்கியம்: இந்திய வீரர்களிடம் ராகுல் திராவிட் உற்சாகப் பேச்சு

By


ஒரு போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவது மிகவும் முக்கியம் என்று இந்திய அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார்.

கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9-வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர் குமாரும்தான்.

தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். அவருக்குத் துணையாக ஆடிய புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒருகட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களும், அதன்பின் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது. ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது. ஆனால், தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து அணியைக் கட்டியிழுத்து வெற்றியின் பக்கம் கொண்டுவந்தனர்.

இந்தப் போட்டிக்கு முன் தீபக் சஹரின் அதிகபட்ச ஸ்கோர் என்பது 12 ரன்கள்தான். ஆனால், அணியின் சூழல், வெற்றி தேவை என்ற நெருக்கடி ஆகியவற்றால் தீபக் சஹர் பேட்டிங்கில் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி முதலாவது அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து இந்திய வீரர்களிடம் ஓய்வறையில் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார். திராவிட் பேசிய வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

”இலங்கை அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால், கடைசிவரை போராட வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

அது கடைசியில் நடந்து வெற்றியாக அமைந்துவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும்கூட கடைசிவரை போராடுவது முக்கியம். சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பேச இது உகந்த நேரமல்ல. நம்முடைய அணியின் கூட்டத்தில் அதுபற்றிப் பேசுவோம். அனைத்தையும் அலசி ஆராய்வோம்.

ஆனால், ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தால், நம்முடைய அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாகத்தான் இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங், அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. பேட்ஸ்மேன்கள் சிறப்பான முடிவையும் அளித்துள்ளார்கள். ஆகச்சிறந்த வகையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

நாம் எதிரணியை மதிக்க வேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல் இலங்கை அணி மீண்டு வந்துள்ளது. நாம் சாம்பியன்போல் திரும்பி வந்துள்ளோம். வெற்றிக்கான வழியைத் தேடியுள்ளோம். உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது”.

இ்வ்வாறு ராகுல் திராவிட் தெரிவித்தார்.

Source link

Leave a Comment