7 வயதில் பெற்றோரை இழந்து தவித்த ரேவதியின் ஒலிம்பிக் பயணம்

By


மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதான ரேவதி வீரமணி. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். ரேவதி குழந்தைப் பருவத்தில் 7 வயதை கடப்பதற்கு முன்னரே அவரது தந்தை வீரமணி வயிற்று பிரச்சினை காரணமாக இறந்துவிட்டார். அதில் இருந்து 6 மாதத்தில் ரேவதியின் தாய், மூளைக் காய்ச்சலால் இறந்தார். இதன் பின்னர் ரேவதியையும் அவரது இளைய சகோதரியையும் அம்மா வழி பாட்டியான ஆரம்மாள் தான் வளர்த்து, படிக்க வைத்தார். இதற்காக அவர் பண்ணைகளிலும், செங்கல் சூளையிலும் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்தார்.

குடும்ப சூழ்நிலையை நன்கு உணர்ந்தரேவதி பள்ளியில் படிப்புடன் ஓட்டப் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தினார். 2014-15-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றமண்டல அளவிலான போட்டியில் ரேவதிவீரமணி வெறும் கால்களுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். அந்த போட்டியில் ரேவதி வெற்றி பெறவில்லை. எனினும் அவரது செயல்திறன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கே.கண்ணனை வெகுவாக கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து ரேவதிக்கு பயிற்சிஅளிக்க விரும்பிய கண்ணன், இதுதொடர்பாக அவரது பாட்டி ஆரம்மாளை சந்தித்துபேசினார். ஆனால் ரேவதி விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதை ஆரம்மாள் விரும்பவில்லை. மேலும் தனதுவீட்டில் இருந்து பயிற்சி மையத்துக்கு சென்றுவர ரேவதிக்கு தினமும் ரூ.40 செலவாகும். இதையும் ஆரம்மாள் யோசித்து பார்த்தார். எனினும் பயிற்சியாளர் கண்ணன் பலமுறை ஆரம்மாளை சந்தித்து அவரை சமாதானப்படுத்தினார். இதன் பின்னர் ரேவதி, மதுரையில் உள்ள லேடிடோக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் வாய்ப்பை கண்ணன் பெற்றுக்கொடுத்தார்.

வெறும் கால்களுடன் ஓடிப்பழகிய ரேவதிக்கு, ஷூக்களுடன் ஓடுவதில் தொடக்கத்தில் சிரமம் இருந்தது. எனினும் முறையானபயிற்சிக்குப் பின்னர் அவருக்கு அது பழக்கமாவிட்டது. 2016-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர், 200 மீட்டர்,4X100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் ரேவதி தங்கம் வென்றார். இதுஅவருக்கு பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

2016 முதல் 2019 வரை கண்ணனிடம் பயிற்சி பெற்ற ரேவதி அதன் பின்னர் பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்வானார். அங்கு பயிற்சியாளர் கலினா புஹாரினா, 400 மீட்டர் ஓட்டத்துக்கு மாறக்கோரி ரேவதிக்கு ஆலோசனை வழங்கினார். இதை ஏற்றுக்கொண்டு தனது திறனை வெளிப்படுத்திய ரேவதி ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

2019-ம் ஆண்டு பெடரேஷன் கோப்பையில் 200 மீட்டர் ஓட்டத்தில் ரேவதி வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 5 மற்றும் 6-ல் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரேஷன் கோப்பையில் ரேவதி கலந்துகொள்ளவில்லை. எனினும் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸில் 400 மீட்டர்ஓட்டத்தில் தங்கம் வென்றார். மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஷிப்பில் ரேவதி 53.71 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ம் இடம் பிடித்தார். இந்தபோட்டியில் முன்னணி வீராங்கனைகளான பிரியா மோகன், எம்.ஆர்.பூவம்மா ஆகியோருக்கு பின்னால் இருந்தார் ரேவதி.

இதில் பிரியா மோகன் தேசிய பயிற்சிமுகாமில் பங்கேற்கவில்லை. மாறாக பூவம்மா காயம் காரணமாக பயிற்சி முகாமில் இருந்து விலகினார். மேலும் வி.கே. விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ மோசமான பார்மில் இருந்தனர். இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான கலப்பு 4X400 மீட்டர் தொடர்ஓட்டத்துக்கு 3 வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்காக இந்திய தடகள கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதில் ரேவதிபந்தய இலக்கை 53.55 விநாடிகளில் கடந்துஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார்.

ரேவதி கூறும்போது, “என்றாவது ஒருநாள் ஒலிம்பிக்கில் சார்பில் நீ பங்கேற்பாய் என கண்ணன் சார் என்னிடம் கூறுவார். அது தற்போது விரைவாக நடந்துள்ளது. இதன் மூலம் எனதுகனவு நனவாகி உள்ளது. இது இவ்வளவுவிரைவாக நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒலிம்பிக்கில் என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன்” என்றார்.

பி.ஏ. முடித்துள்ள ரேவதி, மதுரை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment