மதுசூதனனின் உடல்நலம் விசாரிக்க ஒரே நேரத்தில் வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா || Tamil news Edappadi Palanisamy, Sasikala, who came at the same time to inquire about Madhusudhanan health

Byமதுசூதனனை நேரில் பார்த்த சசிகலா, அவருடைய உறவினர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவருக்கு அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார்.

சென்னை:

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் ஆஸ்பத்திரிக்கு ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உடல்நலம் தேறினார். பின்னர், அவ்வப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த 18-ந் தேதி இரவு அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனின் உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசம் அடைந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருடைய உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று பகல் 12.20 மணியளவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமி சுமார் 20 நிமிடம் ஆஸ்பத்திரியில் இருந்தார்.
ஆஸ்பத்திரிக்குள் சென்ற அவர், சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனையும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களையும் சந்தித்து மதுசூதனன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதே நேரத்தில், பகல் 12.40 மணியளவில், மதுசூதனன் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக சசிகலாவும் அங்கு வந்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் பகுதியில் சசிகலா கார் நுழைந்ததும், எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொள்ளவில்லை.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா அடுத்தடுத்து வந்ததால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கூட தொடங்கினர்.
ஆஸ்பத்திரிக்குள் சென்ற சசிகலா, மதுசூதனனை நேரில் பார்த்தார். பின்னர், அவருடைய உறவினர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவருக்கு அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார். ஆஸ்பத்திரியில் சுமார் 15 நிமிடம் இருந்த சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘1952-ம் ஆண்டு மதுசூதனனுக்கு வயது 14. அந்த வயதிலேயே தலைவருக்காக (எம்.ஜி.ஆர்.) வடசென்னையில் எம்.ஜி.ஆர். மன்றம் ஆரம்பித்தவர். தலைவரோடு மிகவும் பற்று கொண்டவர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு, இங்கு வந்து பார்த்துவிட்டு செல்கிறேன். அவர் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அவர் உறவினர்களிடம் பேசி, அவரை பற்றி விசாரித்துவிட்டு, அவரையும் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றார்.

பெங்களூருவில் சிறையில் இருந்து விடுதலையாகி, வீடு திரும்பிய சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு நிர்வாகிகளையோ, தொண்டர்களையோ சசிகலா நேரில் சந்திக்கவில்லை. சமீபகாலமாக தொண்டர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். முதல் முறையாக சசிகலா, மதுசூதனனை பார்ப்பதற்காக நேற்று வெளியே வந்திருக்கிறார்.
சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னைக்கு சாலை மார்க்கமாக காரில் வந்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில், அ.தி.மு.க. கொடியுடன் சசிகலா வந்தார். இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு அனுமதி இல்லை என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அப்போது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருடைய காருக்கு பின்னால் வந்த அ.தி.மு.க. நிர்வாகியின் காரில் ஏறி சசிகலா பயணம் செய்தார். அந்த காரிலும் அ.தி.மு.க. கொடி இருந்தது.

இந்த நிலையில் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சசிகலா வந்த காரில் அ.தி.மு.க. கொடியை பொருத்தி இருந்தார். இது அ.தி.மு.க.வினர் மத்தியில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment