வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்பவர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு || Tamil news Only the names of the survivors should be included in the voter list high court order to the Election Commission

Byமனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, உயிரோடு இருப்பவர்கள் மற்றும் வாக்களிக்க தகுதியான நபர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

உயிருடன் இருப்பவர்கள், வாக்கு அளிக்க தகுதியானவர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் சைலப்பா கல்யாண் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் பலமுறை இடம்பெற்றுள்ளது. அதேபோல இறந்தவர்களின் பெயர்களும் உள்ளன. எனவே இவர்களது பெயர்களை எல்லாம் நீக்கி, புது வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர் ஏராளமாக உள்ளது. அதனால், இறப்பு சான்றிதழ்களுடன் இறந்தவரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதன் மூலம், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் நிலையை அறியமுடியும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘மனுதாரரின் இதுபோன்ற கோரிக்கையைப் பரிசீலித்து, சிறந்த வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்து நாடாளுமன்றம் அல்லது இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.

அதுவும் இந்திய தேர்தல் ஆணையம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, உயிரோடு இருப்பவர்கள் மற்றும் வாக்களிக்க தகுதியான நபர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். மற்றவர்களின் பெயர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த வகையில் நடவடிக்கை எடுத்து வாக்காளர் பட்டியலை தயாரிப்பது என்பதை இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்துகொள்ள வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்.’

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment