4 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற 2 சிறுவர்கள் || 2 boys killed 4 years old child

Byபாட்டி வீட்டின் அருகே விளையாடிய 4 வயது குழந்தையை அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி கொன்றதாக அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவியரசி. இவர்களுக்கு, பிரியதர்ஷன் (8), தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்கள்.

இந்த நிலையில் பார்த்திபன் தன்னுடைய 2-வது மகன் தீனதயாளனை அதே பகுதியில் உள்ள தனது தாயார் லட்சுமியின் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் கொண்டு சென்று விட்டுள்ளார். அந்த சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பார்த்தபோது, குழந்தை தீனதயாளனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி லட்சுமி, தனது மகன் பார்த்திபனுக்கு போன் செய்து தீனதயாளனை காணவில்லை என்று கூறி உள்ளார்.

பின்னர் இதுகுறித்து விஸ்வநத்தம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான சிறுவன் தீனதயாளனுடன் விளையாடிய அதே பகுதியை சேர்ந்த 13, 11 வயது சிறுவர்கள் இருவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தீனதயாளனை அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தள்ளிவிட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது போலீசாருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே போலீசார், நேற்று முன்தினம் இரவில் கிணற்றில் தேடினர். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் தீனதயாளன் உடல் கிணற்றில் மிதந்தது. பின்னர் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். கொலைக்கான காரணத்தை கண்டறிய அந்த சிறுவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்புதுலங்க காரணமான கண்காணிப்பு கேமரா

தனது பாட்டி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தீனதயாளனை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்ட போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துப்புதுலங்கவில்லை. எனவே அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான், தீனதயாளனை அதே பகுதியை சேர்ந்த 13, 11 வயது சிறுவர்கள் கூட்டிச் சென்றது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து அவர்களை அழைத்து விசாரித்த போதுதான், அந்த 2 சிறுவர்களும் கிணற்றில் தள்ளி தீனதயாளனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக 2 சிறுவர்களிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment