69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் || Tamil News Vaigai Dam water level reached 69 feet

Byவைகை அணை நீர்மட்டம் 69 அடியை நெருங்கி வருவதால் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தவண்ணம் உள்ளது. அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வைகை அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளியணை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 68.29 அடியாக இருந்தது. 11 மணி நிலவரப்படி 68.50 அடியாக அதிகரித்தது. 69 அடியை எட்டும் போது முதல் வெள்ளஅபாய எச்சரிக்கையும், 70 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும் விடப்படும். இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 69 அடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணைக்கு விநாடிக்கு 1500கனஅடி நீர் வந்த வண்ணம் உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5392 மி.கனஅடியாக உள்ளது.

நீர்மட்டம் முழுகொள்ளளவை நெருங்கி வருவதால் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் கால்நடைகளை குளிப்பாட்டகூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் வரும் பாதைகளில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் வைகை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அணையை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment